Monday, 26 January 2026

குரானின் அரு மருந்து நோன்பு

 

குரானின் அரு மருந்து நோன்பு

(டாக்டர் .பீ.முகமது அலி,.பீ.எஸ்.()

அல் குர்ஆனில் 2:163 வசனத்தில் , 'நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது, என்று அருளப்பெற்றுள்ளது. அதனுடைய மகிமையினைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். ரஜப் மாதத்தில் விதை விதித்து, ஷபாஅன் மாதத்தில் தண்ணீர் ஊற்றி, ரமலான் மாதத்தில் உங்கள் நன்மைகளை அறுவடை செய்யுங்கள் என்பதால் நாம் நோன்பு நோக்குகிறோம். நோன்பின் தாரகை மந்திரமே, தனித்திரு, விழித்திரு, பசித்திரு, வணங்கிடு, வழங்கிடு என்றால் மிகையாகாது.

ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது எவ்வாறு அறிவுபூர்வமான நன்மை என்பதினை அமெரிக்க நரம்பியல் இயக்குனர் 'மார்க் மாட்ஸன்' விவரித்துள்ளார்.  மனிதன் நோன்பு இருந்தால் அவனால் நீண்ட நாட்கள் வாழ முடியும், எவ்வாறு என்றால் உண்ணா நோன்பு இருந்தால் கலோரி மூளை நரம்பு மண்டலத்திற்குச் சென்று, 'பார்கின்சன்' என்ற நரம்பு நடுங்கும் நோயிற்கு, அல்லேமியர் என்ற ஞாபக மறதி நோய்களையும் வராது பாதுகாக்கும் என்கிறார்.

பார்கின்சன் நோயிற்கு  உதாரணமாக மறைந்த உலக ஹெவி வெயிட் சாம்பியன் முகமது அலி, பட்டத்தினை வென்றவுடன் அமெரிக்க சட்டப்படி ராணுவத்தில் பணியாற்றவேண்டும். ஆனால் அவரை வியட்நாம் நாட்டில் யுத்தத்திற்காக உத்திரவு வந்தபோது எனது இஸ்லாமிய மார்க்கம் அநியாயமாக மக்களைக் கொல்ல அனுமதிக்க வில்லை என்று மறுத்ததினால் அவர் பெற்ற பட்டத்தினை பிடிங்கினாலும் மறுபடியும் போட்டியில் பங்கேற்று வென்ற உடல் தகுதியினைக் கொண்டவர். அவர் முதுமை காலங்களில் கை, கால்கள், உடல் நடுக்கம் கொண்டார். அதேபோன்று எனது சென்னை புதுக் கல்லூரி தோழன் முகமது இருபான் படிக்கின்ற காலங்களில் கூடைப்பந்து, பூ பந்து போட்டிகளில் வெற்றி கொண்டவர். அவர் ஹாங்காங்கில் வியாபாரம் செய்தபோது எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் அதே சுறுசுறுப்பாக இருந்தார். அவர் சென்னைக்கு வந்திருப்பதாக கேள்விப்பட்டதினை தொடர்ந்து நான் அவருடைய நுங்கம் பாக்கம் இல்லத்தில் பார்த்தபோது எனக்கே அழுகை வந்தது, ஏனென்றால் அவர் கை, கால் நடுங்கும் நோயால் பாதிக்கப் பட்டிருந்தாராம்.

அல்லேமிர் என்பதிற்கு உதாரணமாக எங்கள் ஊரில் பெரியவர் சிலர் மற்றும் சென்னையில் சிலர் ஞாபக மறதியால், வயது மூப்பதால் வெளியே வந்தவர்கள் திரும்பி வீடு வருவதிற்குத் தெரியாமல் அலைவதும் தெரிந்தது.

ஆயிஷா(ரலி) அவர்கள் ரசூலுல்லாஹ் ஷபாஅன் மாதத்தில் நீண்ட நேரம் நோன்பு வைப்பார்கள் என்று ஹதிதில் கூறப்பட்டுள்ளது  இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் ரசூலுல்லாஹ் நோன்பு நோற்பதால் பலவீனமோ, சோர்வே அடைய மாட்டார்களாம். ரசூலுல்லாஹ் தோழர்கள் நோன்பு நேரங்களில் போரிடும்போது வயிற்றில் இறுக துண்டினை கட்டிக் கொண்டு போரிடுவார்களாம்.

நோன்பு நேரங்களில் கூட சிலர் வயிறு புடைக்க உண்டுவிட்டு ஏப்பம் விடுவதும், மது குடிப்பதும், சிகரெட்டு புகைப்பதும் இளைஞர்களிடையே இருப்பது வருந்தி கண்டிக்கத்தக்களல்லவா? நோன்பு நேரங்களில் கடைத்தெருவில் வீண் அரட்டை அடிப்பதும், வலிய சண்டை, சச்சரவு இழுப்பதும் தவிர்ப்பது நல்லது தானே!

ரசூலுல்லாஹ் நோன்பு பெருநாள் அன்று வீட்டிலிருந்து மஸ்ஜிதே ஹரத்திற்கு வரும் வழியில் ஒரு சிறுவன் அழுது கொண்டு இருந்தானாம். அவனிடம் விசாரிக்கும்போது தனக்கு புதிய உடை இல்லை என்று கூறியதினை அறிந்து வீட்டிற்கு அழைத்து சென்று அவனுக்கு உடை அணுவிட்டார்களாம். அதுதான் ஈகை. அதனை விட்டு, விட்டு பலர் அறியும் பொருட்டு பெருமைக்காக உதவுவது தான் தான தர்மமா? சிலர் ஜும்மா தொழுது விட்டு வெளியே வரும்போது இளம் வயது பெண்கள் சிறுவர்,சிறுமிகளை வைத்து கை ஏந்தச் சொல்வதும், அதற்கு தானம் செய்கிறேன் என்று ஒரு ரூபாய், இரண்டு என்று காசுகளை பலர்அறியக் கொடுப்பதும் தான் தான தர்மமா? ரசூலுல்லாஹ் சொல்லியிருக்கிறார்கள் உங்கள் கை எப்போதும் மேல் நோக்கியே இருக்க வேண்டும், மாறாக கீழே கை ஏந்தி நிற்க சொல்லலாமா அதுவும் சிறுவர்களை?

என்னை என் அன்னை சிறு வயதிலிருந்தே நோன்பு வைக்க பழக்கி விட்டது. அதனை காவல் துறை பணியில் இருந்தபோதும் கை விடவில்லை. சில சாப்பாடே கிடைக்காத இடங்களிலும், சற்றும் எதிர் பார்க்காத இடங்களிலும் நோன்பு வைக்கவும், திறக்கவும் உணவு கிடைத்திருக்கிறது என்பதினை இங்கே சுட்டிக்காட்ட கடமை பட்டுள்ளேன்.

1)     நான் 1997ம் ஆண்டு கோஸ்டல் அதாவது கடற்கரை பாதுகாப்பில் இலங்கை விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டிற்கும் நுழைந்து விடாத படி தணிக்கை சாவடிகள் அமைத்து கண்காணிக்கும் பணியில் இருந்தேன். உங்களுக்கெல்லாம் தெரியும் இந்து மக்கள் அறுபது வயதினை கொண்டும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள நாகை மாவட்டம்  திருக்கடையூரில் கடற்கரை ஓரம் தணிக்கை சாவடி அமைந்துள்ளது. ஒரு நாள் அதிகாலை நோன்பு வைத்த பின்பு டி.ஜி.பி என்னை கூப்பிட்டு அங்கே உள்ள தணிக்கை  சாவடியில் ஒரு துப்பாக்கி காணவில்லையாம், ஆகவே அங்கு சென்று பாருங்கள் என்றார். உடனே அரசு ஜீப்பில் புறப்பட்டு சென்றேன். அங்கே சென்று விசாரித்ததில் சில விஷமிகள் தணிக்கை சாவடியினை விரும்பாமல் எடுத்திருக்கலாம் என தெரிந்தது. ஆகவே அந்த ஊரைச் சுற்றி ஒலி பெருக்கி வைத்து யாரும் எடுத்திருந்தால் அருகில் உள்ள காவல் நிலயத்திலோ அல்லது கிராம அலுவலகர்களிடத்திலோ ஒப்படைத்து விடுங்கள் என்று விளம்பரப் படுத்தப் பட்டது. அங்கே உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி  பண், பிஸ்கட் சர்பத் வைத்து நோன்பு திறந்தேன். அங்கே இரவு 8 மணிக்கெல்லாம் கடைகளை அடைத்து விடுவதால் எனது டிரைவரிடம் காலையில் நோன்பு வைக்க ரொட்டி, அல்லது பண் மற்றும் வாழைப்பழம் வாங்கி வரச்சொன்னேன். என்னுடைய டிரைவர் கடைகளில் விசாரித்துக் கொண்டு இருக்கும்போது அங்கு நின்ற கோவில் பூசாரி 'ஐயா’ எதற்கு என்று கேட்டு விவரம் அறிந்தவுடன் கேட்டுள்ளார். நீங்கள் கவலைப் படாதீர்கள் காலை 3.30 மணிக்கு எல்லாம் நான் தருகிறேன் என்று சொல்லியது மட்டுமல்லாமல் இதனை சாரிடம் சொல்லாதீர்கள் என்றும் கூறி இருக்கிறார். அதிகாலை சரியாக 3.30மணிக்கு அறை கதவு தட்டப் படுவதினை அறிந்து எழுந்து பார்த்தபோது பூசாரி ஒரு டிபின் கேரியருடனும்,பக்கத்தில் என்னுடைய டிரைவரும் நிற்கிறார்கள். அந்த பூசாரி,  'இவ்வளவு பெரிய அதிகாரி நோன்பு வைக்க சிரமப்படலாமா’ என்று கேட்டது எனது மனதில் இன்னும் மனித நேயம், சமுதாய ஒற்றுமை தமிழகத்தில் உள்ளது என்று இறைவனுக்கு நன்றி கூறிவிட்டு டிபான் கேரியரை திறந்து பார்த்தால் சுட சுட இட்லி,வடை, சாம்பார், சட்டினியும் இருந்தது. அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டேன். நோன்பு வைத்து சில மணித்துளிகளில் காவலர் ஒருவர் ஓடி வந்து ஐயா, அருகில் உள்ள குளத்தில் யாரோ துப்பாக்கியினை போட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள் அதனை குளிக்க சென்ற வயதான பெண் காலில் தட்டுப்பட்டதால் எடுத்துள்ளார் என்று கூறினார்.  நானும் அங்கே சென்று பாத்துவிட்டு இறைவனுக்கும், அந்த பெண்மணிக்கு, பூசாரிக்கும் நன்றி தெரிவித்து சென்னை திரும்பினேன்.

2)     2000ம் ஆண்டு நான் ஒரு வேலையாக டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டேன். அதே விமானத்தில் சக காவல் அதிகாரி துக்கையாண்டியும் வந்தார். நான் நோன்பு வைத்திருந்தேன். தமிழ்நாடு அரசு இல்லத்தில் நாங்கள் இருவரும் தங்கி இருந்தோம். டெல்லி சென்ற விமானம் இரவு 10 மணிக்கு அடைந்தது. விமானத்தில் நோன்பு திறந்த நான் மறு காலை நோன்பு வைப்பதிற்காக ஏதாவது பிரட் கிடைக்குமா என்று அங்குள்ளவர்களிடம் கேட்டு வாங்கி வைத்துக் கொண்டேன். என்னோடு தங்கியிருத்த துக்கையாண்டியும் 'பிரதர், நானும் உங்களுடன் இன்று நோன்பு வைத்துப் பார்க்கிறேன் என்று கூறி வைத்தார். நான் நோன்பு திறக்கும்போது தான் அவரும் சாப்பிட்டார். இது எதனைக் காட்டுகின்றது என்றால் ஒன்று நட்பு, மற்றொன்று ஒருவர் பசித்திருக்கும் போது   அருகில் உள்ளவர் வயிறு முட்ட சாப்பிடக் கூதாதல்லவா?

3)     2003ம் ஆண்டு டெல்லியில் உள்ள DCRB கிரைம் ரெகார்ட் அலுவலகத்தில் என்னை பயிற்சிக்காக அனுப்பி இருந்தார்கள். அப்போது நோன்பு வைத்திருந்தேன். ஒரு மாலை நேரத்தில் பயிற்சி நேரமானதால் நோன்பு திறக்க அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு செல் என்று ஹிந்தி பேசும் டிரைவரிடம் சொன்னேன். அவரும் ஒரு பள்ளி வாசல் அருகில் வண்டியினை நிறுத்தினார்.  பல்வேறு வகையான பழக்கடைகள், சர்பத்துகள் இரண்டு பக்கமும் வைத்திருந்தார்கள். நான் பள்ளிவாசல் உள்ளே சென்றேன். நமது ஊர் மாதிரி நோன்பு கஞ்சி கிடைக்குமா என்று பார்த்தேன் இல்லை. அங்கு பேரிச்சம் பழங்கள் மற்ற பழங்கள் ஒவ்வொரு குழு முன்பும் வைக்கப் பட்டிருந்தது, அதில் கலந்து கொள்ளலாமா என்ற தயக்கம் எனக்கு இருந்தது.   ஏனென்றால்  அவ்வளாக   சரளமாக ஹிந்தி பேச தெரியாது.  எனது சைரன் பொருத்திய வாகனத்தினைப் பார்த்து அந்த பள்ளிவாசல் நிர்வாகி டிரைவரிடம் யார் வந்திருக்கிறது என்று வாசலில் கேட்டுவிட்டு என்னிடம் வந்து, அழைத்துக் கொண்டு அவர், இமாம்,முவாஜின் மற்றும் மற்ற நிர்வாகிகள் உட்கார நோன்பினை திறந்தேன். இது எதனைக்  காட்டுகிறது என்றால் ஒன்று விருந்தோம்பல் மற்றொன்று இறைவன் கடமையினை நிறைவேற்ற உறுதி கொண்டால் எப்படியாவது உணவு நிச்சயம் கொடுப்பான் தானே!

இஸ்லாமிய சட்டப் படி சொத்தில், வருமானத்தில் இரண்டரை சதவீதம் தானம் செய்யலாம். அது தனது சொந்த பந்தங்கள் ஏழைகளாக இருந்தால், மற்ற  ஏழை, எளியவர் ஆகியோருக்கு வழங்குவது தான் சகாத் ஆகும். நான் ஆஸ்திராலியா சிட்னி நகரில் இருக்கும் லக்கம்பி பள்ளிக்கு தொழுகச் சென்றேன். அங்கே ஒரு கட்டிடம் இருந்தது அதில், 'House of Zakat' என்று எழுதப் பட்டிருந்தது. அங்குள்ள நிர்வாகத்தினரிடம் விசாரித்தேன், அவர்கள் சொன்னார்கள் அங்கே உள்ள ஏழைகளை, தேவையானவர்களை கணக்கெடுத்து சகாத் கொடுப்பவர்களிடம் வசூல் செய்து விநியோகிக்கிறார்களாம். அது சிறந்த முறையாக இருந்தது. இதனையே மற்ற இஸ்லாமிய ஊர்களிலும் பின்பற்றினால் சிறப்பாக இருக்குமல்லவா?

Friday, 19 December 2025

அற்ற குளத்தின் அரசியல் பறவைகள்

 


(.பீ.முகமது அலி, .பீ.எஸ்( )

தமிழக மக்கள் மழைக் காலத்தில் குளங்கள், ஏரிகள்,லெகூன் போன்றவை தண்ணீர் நிறைந்து இறை தேடும் பறவைகளை கவர்ந்து இழுக்கும், அதில் வெளி நாட்டுப் பறவைகள் பல்வேறு நிறங்கள் கொண்டவை வெகு தூரத்தில் இருந்து வந்து தாழ்வான செடிகளில் அமர்ந்து மீன்கள், புழுக்கள் ஆகியவற்றை தின்று, கறைகள். மரங்களில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து, அதன் பின்பு நீர் வற்றியவுடன் தங்கள் நாட்டிற்கு இடம் பெயர்கின்றன. ஆனால் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் சென்னை நகரத்தில் கொட்டித் தீர்த்த மழையில், மூக்கைப் பிடிக்குமளவிற்கு நாற்றமடிக்கும் கூவம் ஆற்றின்  கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் தூர் வாரப் பட்டதால் அழுக்கு தண்ணீர் கடலிலும், கடல் தண்ணீர் கூவத்திலும், அது மட்டுமல்லாமல் மழை நீர் கலந்ததாலும் நிரம்பி இருந்தது. ஆதலால் வெளி நாட்டுப் பறவைகளான செங்கால் நாரை, கொக்கு, கூழக்கிடா போன்ற பறவைகள் வருகை தந்ததினைக் கண்டு கழிக்க சென்னை மற்றும் புற நகர் மக்கள் குவிந்ததினை பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் படம் பிடித்துக் காட்டின.

               அதே போன்று தான் அரசியலிலும் சிலர் தங்கள் உடைகளை மாற்றி பழம் திண்ணிப் பறவைகளாக இருப்பதனை தமிழக அரசியலில் உள்ளதினை படம் பிடித்து உங்களுக்குத் காட்டலாம் என எண்ணுகிறேன். 1965ம் ஆண்டு தமிழகமெங்கும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீ கொழுந்து விட்டு எரிந்தது. அதில் மாணவர்கள் முக்கிய பங்காற்றினார்.  மாணவர் தலைவர்களாக இருந்த காமராஜர், காளிமுத்து போன்றோர் ஒரு வருட தண்டனை வழங்கப் பட்டும், சிலர் தீக்குளித்தும் இறந்தனர் என்பது வரலாறு. அதன் பின்பு 1967ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு. அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது. அமர் 1969ம் ஆண்டு மறைவிற்குப் பின்பு கலைஞர் பதிவியேற்றார் முதல்வராக. அதன் பின்பு 1971ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு. 205 தொகுதிகளைப் பெற்று ஆட்சியில் தொடர்ந்தது. அந்த நேரத்தில் இந்தியாவின் இரும்பு பெண் என்று உலகில் பெயரெடுத்த இந்திரா காந்தி பாகிஸ்தான் பகுதியான பங்களா தேசத்தில் படையெடுத்து தனி நாடாக்கி முஜிபுர் ரஹ்மான் தலைமையில் ஆட்சி அமைத்தது. அந்த நேரத்தில் தி.மு. மாநாடு கோவையில் நடந்தது அதில் தி.மு. 1971ல் அமோக வெற்றியினைத் தொடர்ந்து சில ஆர்வமிக்க தொண்டர்கள் கலைஞரை பங்களா தேச அடுத்த்த மு ஜிபுர் ரஹ்மான் என்று கூச்சல் போட்டனர். ஏற்கனே திராவிட நாடு திராவிடருக்கே என்று கொள்கை கொண்ட கட்சி எங்கே மறுபடியும் தனித்தமிழ் நாடு என்ற கோரிக்கையினை வைக்குமோ என்று பயந்த மத்திய அரசு தக்க தருணம் நடவடிக்கை எடுக்க காத்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். சில கோரிக்கைகளை பொதுக் கூட்டத்தில் 1972ல் வைத்தார், அதன் பின்னெனியில் மத்திய அரசு மற்றும் உளவு படை இருந்ததாக கூறப் பட்டது. அது கட்சி கட்டுப்பாட்டினை மீறியதாக கட்சியிலிருந்து நீக்கப் பட்டார். அவரும் .டி.எம்.கே என்ற கட்சியினை ஆரம்பித்து பலரையும் தி.மு.கவை  விட்டு பிரித்தார்.

1975ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலையினை இந்திரா அறிவித்தார். அதன் பின்பு  தி.மு. ஆட்சியினை கலைக்க பல்வேறு திட்டங்கள் போடப் பட்டன. அதில் ஒன்று தான் ஊழல் குற்றச் சாட்டு. அப்போது கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த கல்யாண சுந்தரம், மத்தியில் இருந்த மோகன் குமாரமங்கலம் ஆகியோர் சேலம் முன்னால் எம்.பி கண்ணன் ஆகியோர் மத்தியில் ஊழல் குற்றச் சாற்றினை வைத்தனர். அதன் பின்பு 1976ம் ஆண்டு தி.மு. அரசு கலைக்கப் பட்டது. இந்த தகவலை சேலம் எம்.பி.யாக இருந்த கண்ணன் நான் 1986ம் ஆண்டு சேலம் எஸ்.பி.யாக பதவியேற்றபோது  மரியாதை நிமித்தமாக என்னைப் பார்க்க வந்த கண்ணன் சொன்னார். தி.மு.கவிலிருந்த முக்கிய பிரமுகர்கள் பி.யு.சண்முகம், மாதவன், மதுரை முத்து, மதியழகன், அரங்கநாயகம்  போன்றோர்எ டி.எம்.கே.யில் இணைந்ததனர். இவையும் ஒரு வரலாறு.

               தி.மு. ஆட்சி அகற்ற ப்பட்டு 1977ம் நடந்த தேர்தலில் எம்ஜியார் ஆட்சி அமைத்தார். இந்திரர காந்தியினை தி.மு. ஆட்சியினை கலைத்திற்காக துரோகி என்று அழைத்த தி.மு.க,துரோக நண்பனுக்கு நண்பன் கூட்டாளி’ என்பது போல எம்.ஜி.ஆர் பாணியில் அவர் மீது ஊழல் குற்றச் சாட்டு நீதிபதி ரே தலைமையில் அமைக்கப் பட்டு 1980ம் ஆண்டு கலைக்கப் பட்டு, சட்டசபை தேர்தலும் நடந்தது. அதில் எம்.ஜி.ஆர் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார், அது அவர் மரணம்  1987ம் ஆண்டு வரை நடந்தது. அவர் கட்சியும் உடைந்தது. அதன் பின்பு கலைஞரை எதிரியாக கருதிய .வே. வேலு, முத்துசாமி, கண்ணப்பன், ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ,சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஆகியோர் தி.மு.காவில் சேர்ந்து மந்திரியாகவும் உள்ளனர்.

               1989ம் ஆண்டு தி.மு.கா ஆட்சி அமைத்ததும், மத்திய அரசிற்கு கண்ணை உறுத்தியது, ருசிகண்ட பூனை சும்மா இருக்குமா, எப்படியாவது கலைக்க திட்டம் போட்டு சட்டசபையில் ஜெயலலிதா நாடகம் நடத்தி ப் பார்த்தார். ஆனால் முடியவில்லை. அதன் பிறகு தி.மு.கா தலைவருக்கு தூண் போல இருந்த வைகோ செய்த செயல் தீயாக பற்ற வைத்தது. இலங்கை உடன் இந்தியா செய்த ஒப்பந்தத்தில் .பி.கே.எப் என்ற இந்திய படை அனுப்பி விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பறிக்க அனுப்பி வைக்கப் பட்டது. வைகோ கட்சி தலைமைக்குத் தெரியாமல் படகில் ஜாப்பினா சென்றார். அப்போது இந்திய படைகளால் பிடிக்கப் பட்டார். அதன் பின்னர் தான் தி.மு. தலைமைக்குத் தெரிய வந்தது. அதன் பின்பு தலையிட்டு விடுதலை செய்யப் பட்டார். தலமைக்கு தெரியாமல் அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியும் கொடுத்ததார். விடுதலைப் புலிகளுடன் இணைந்து தலைமைக்கு ஊறு விளைவிக்க திட்டமிட்டதாக கட்சியில் இருந்து நீக்கப் பட்டார். 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் கொல்லப் பட்ட பின்பு நடந்த தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி அமைத்தார்.

               1994ம் ஆண்டு வைகோ தி.மு. என்ற கட்சியினை ஆரம்பித்தார். தி.மு.. 9 மாவட்ட செயலாளர்கள் அவர் கட்சியில் சேர்ந்தனர். மத்தியில் ஆட்சியின் பங்கில் செஞ்சி ராமச்சந்திரன், எல். கணேசன், கண்ணப்பன் போன்றோர் மந்திரியாக பதவி வகித்தனர். 1994ம் ஆண்டு அறிவாலயத்தினை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று பொன். முத்துராமலிங்கம் தலைமையில் ஊர்வலம் கிண்டி அண்ணா சாலையிலிருந்து மாலை நேரத்தில் புறப்பட்டனர். அப்போது நான் டி.சி.பி ஆகா பதவியில்  பாதுகாப்பு பொறுப்பில் அமர்த்தப் பட்டதால் எலடாம்ஸ் ரோடு அண்ணா சாலையில் தடுத்து நிறுத்தி எச்சரித்து ஊர்வலத்தினை அனுப்பி வைத்தேன். அப்போது தி.மு..தலைவர் பாதுகாப்பாக அறிவாலய வாசலில் நாற்காலி போட்டு உயிர் போனாலும் பரவாயில்லை யாரையும் நுழைய விட மாட்டேன் என்றதினை அன்றைய பத்திரிக்கைகள் வெளிச்சம் போட்டுக் காட்டின.  அதன் பின்பு ஒவ்வொரு மாவட்ட செயலாளராக மரத்திலிருந்து பனிக் காலத்தில் உதிரும் இலைகள் போல விலகினர். அதில் திருநெல்வேலி மாவட்ட செயலாளராக இருந்த லட்மணன் ஒரு பெரிய ஊழல் குற்றச்சாட்டையே வைகோ மீது வைத்து கடிதம் எழுதி அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுத்தார்  அதனை சி.பி.சி..டி.யும் விசாரித்தனர். இன்று கலைஞர் இறந்ததிற்குப் பின்பு தி.மு.காவுடன் கூட்டணி வைத்து மகனை எம்.பி.யாக ஆக்கியதும் ஒரு வரலாறு

.

               பி.ஜெ.பி கூட்டணி  ஆட்சி மத்தியில் 1998ம் ஆண்டு அமைக்கப் பட்டவுடன் மக்கள் கட்சியும் பாட்டாளி சேர்ந்தது. அதில் ரயில்வே தொழிற்சங்க தலைவர் தலித் ஏழுமலை, சண்முகம் ஆகியோர் மந்திரியாக .. சார்பில் மந்திரியாகினர். தலித் ஏழுமலை .. தலைவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஏழுமலை விலகி .தி.மு.கவில் இணைந்தார். அதேபோன்று தான் பாராளுமன்ற உறுப்பினர் இளங்கோவனும், பேராசிரியர் பொன்னுசாமியும்  இணைந்தனர். என் குடும்ப உறுப்பினர் ஆட்சியில் பங்கு வகித்தால் என்னை நடு ரோட்டில் வைத்து சாட்டையால் அடியுங்கள் என்று முழங்கிய ராமதாஸ் தனது 36 வயது மகனான அன்புமணியை கேபினெட் சுகாதார மந்திரியாக்கினார். தற்போது அன்புமணி அப்பாவிடமிருந்து பிரிந்தவுடன் கண் கெட்டபின்பு சூரிய நமஸ்காரம் என்பது போல அன்புமணியை இளம் வயதில் மந்திரியாக்கியது வாழ்க்கையில் தான் செய்த மிகப் பெரிய தவறு என்று கூறுகிறார். பழம் திண்ணி பறவைகள் லாபத்தினை நோக்கி படையெடுக்கும் என்று பலாப்பழ ஊர்காரருக்கு தெரியாமல் போனது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே. அதோடு அவர் நிற்கவில்லை அன்புமணி மீது சி.பி. பதிந்த ஊழல் வழக்கினை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அவருடைய செயற்குழு தீர்மானத்தில் சேர்த்துள்ளார்.

               வைகோவினை பொடா சட்டத்தில் ஜெயிலில் அடைத்த பின்னர், அவர் பூந்தமல்லி கோர்ட்டுக்கு அழைத்து வந்தபோது மர நிழலில் வெகு நேரம் வயது மூப்பிலும் காத்துக்கொண்டிருந்த கலைஞர், ஆனால் அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.காவினை கைவிட்டு .தி.மு.கவில் இணைந்தார். அது பற்றி ஜெயலலிதாவிடம் கேட்டபோது, 'அரசியலில் யாரும் நிரந்தர நண்பரும், பகைவருமில்லை' என்றார்.

               தமிழ் நாட்டில் கஜா புயல், மற்றும் பேரிடர் நேரத்தில் தொண்டு நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை போல அமைப்பில் ஏழை மாணவர்கள் உயர் கல்வி பயில உதவி செய்யாமல் தனது இளம் வயது சினிமா வருமானத்தில் லாபம் ஈட்டி நடுத்தர வயதானதும் தனது சினிமா நடிப்பினை ரசித்த வீசில் குஞ்சுகளை ஒருங்கிணைத்து அதனை அரசியல் கட்சியாக உருவாக்கி முதல்வர் ஆகலாம் என்று கணக்கு ஒரு நடிகர் திட்டம் போட்டுள்ளார். வெளிநாட்டு ஆடம்பரக்  காரை இறக்குமதி செய்ததிற்காக விதிக்கப் பட்ட வரியினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அது விசாரணை செய்தபோது, அந்த நீதிபதி சொன்னது நினைவிற்கு வருகிறது, அது என்னவென்றால், 'சினிமாவில் நடித்து அதில் தமிழ்நாட்டு இளைஞர்கள் பார்த்ததினால் பல கோடிகளை ஈட்டிய நடிகருக்கு மக்களுக்கு உபயோகமாகும் ஒரு சில கோடிகளை வாரியாக செலுத்த முடியாதா' என்பது தான். பல முன்னணி நடிகர்கள் எல்லாம் தேர்தலில் தோற்றதும் பின் வாங்கிய பின்னால் தற்போது குழப்பத்தில் உள்ள அரசியல் சூழ் நிலையில் புது கட்சி கொடியினை பறக்க விட்டுள்ளார். அதில் விசிலடிச்சான் குஞ்சுகளும் அப்பாவி மக்களும் 41 பேர்களை பலி வாங்கியது தான் மிச்சம். அதில் என்ன ஆச்சரியம் என்றால் பழம் .தி.மு. விசுவாசி ஒருவரும், பேச்சினை வைத்தே பணம் சம்பாதிக்கும் பேச்சாளரும், பல கட்சிகளில் தாவியரும் சேர்ந்ததுதான் ஆச்சரியம். ஒரு நிருபர் அவரிடம் 'நீங்கள் அந்த நடிகரின் கட்சியினை பற்றி மட்டமாக  பேசிவிட்டு இப்போது அதிலே சேர்ந்தது கண்டு மக்கள் காரி துப்ப மாட்டார்களா என்று கேட்டதிற்கு, அவர் சொன்ன பதில் எச்சியினை துண்டால் துடைத்துக் கொள்ள வேண்டுவது தான் என்பது, எருமை மாட்டில் பெய்த மழையாக உங்களுக்குத் தெரியவில்லையா? கிராமத்தில் ஒரு கதையினை வைத்து பழமொழி  சொல்வார்கள். ஒரு விதவை இரண்டு மகன்களை வீடுகளில்  சுத்தம் செய்து, பாத்திரம் கழுவி இரண்டு மகன்களை வளர்த்து படிக்க வைத்து நல்ல வரனாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தாளாம். மகன்கள் தன்னை பாதுகாப்பான் என்று. ஆனால் அவர்கள் மனைவிகளின் சொல் கேட்டு பிரிந்து சென்று விட்டார்களாம். அதுதான், 'பொண்டாட்டி ஆத்தா பெரியாத்தா பொழைக்க மதியை சொல்லாதா' என்று. அதுபோல பழந்திண்ணி பறவையாகியதாக உங்களுக்கு தெரியவில்லையா

          இன்னொரு கட்சியான தே.மு.தி.க நடிகரும் அதன் தலைவருமான விஜயகாந்திற்கு பின்பு அவர் துணைவியார் கட்சியினை நடத்தி வருகிறார். கடந்த தேதலில் அ.இ.அ.தி.மு.க தேர்தலில் கூட்டணி வைக்கும்போது தங்களுக்கு ஒரு ராஜ்ய சபா எம்.பி தருவதாக சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் என்ற ஆதங்கத்தில் உள்ளார். அவர் தனது கூட்டணி முடிவினை 2026ம் ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப் படும் என்று சொல்லியுள்ளார். தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்காவது எம்.பி சீட் வாங்கி விட வேண்டும் என்று வேகத்தில் உள்ளதால் அவர் கட்சி எப்படி சாயும் என்று சொல்ல முடியாது. அது மதில் மேல் ஏறிய பூனையாகத் தான் இருக்கும் என்று அரசியல் கட்சிகளும் தீர்மானித்துள்ளனர்.

ஆகவே 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்க, நெருங்க கட்சித் தாவலும், கூட்டணி கலைவதும் நாம் பார்க்கத்தான் போகிறோம். அதற்குத் தான் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி பற்றி 2026ம் ஆண்டு ஜனவரியில் தான் முடிவு செய்வோம் என்று சொல்கின்றன. ஆகவே பறவைகள் பணத்திக்காக படையெடுக்கும் காட்சியினை  நாமும் பார்க்கத்தான் போகிறோம் என்று சொன்னால் சரியா?